Search
Saturday 20 October 2018
  • :
  • :

எமன் – விமர்சனம்

எமன் – விமர்சனம்

படத்துக்குப் படம் வித்தியாசமான கதைக்களத்திலும், கதாபாத்திரங்களிலும் தன்னை நிரூபித்து வரும் விஜய் ஆண்டனி ‘எமன்’ படத்தில் காட்டியிருப்பது இதுவரை பார்த்திராத இன்னொரு முகம்.

இசையமைப்பாளராக இருந்த விஜய்ஆண்டனிக்கு ‘நான்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அரிதாரம் பூசிவிட்ட ஜீவா சங்கர்தான் எமன் படத்தின் இயக்குநர்.

யார் எமன்?

பிறந்த சில நாட்களிலேயே பெற்றோரை இழந்ததால் விஜய் ஆண்டனிக்கு சமூகம் வைத்த பட்டப்பெயர்தான் எமன்.

என்றாலும், கதைக்கும் தலைப்புக்கு யாதொரு தொடர்புமுமில்லை என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

வேறு ஒரு தலைப்பை சூட்டியிருந்தால் குழந்தை குட்டிகளோடு பெண்களாவது தியேட்டருக்கு வந்திருப்பார்கள்.

நெகட்டிவ்வான தலைப்பை வைத்ததால் ஃபேமிலிஆடியன்ஸ் தியேட்டருக்கு வரும் வாய்ப்பை இழந்திருக்கிறார் இயக்குநர்.

சரி.. கதை என்ன?

அரசியலில் எங்கோ இருக்கும் எதிரியை விட பக்கத்தில் இருப்பவர்களே ஆபத்தானவர்கள் – என்பதுதான் ஒரு வரிக்கதை.

தன் தாத்தாவின் அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் பணத்துக்காக, செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறைக்குச் செல்கிறார் விஜய் ஆண்டனி.

சிறைவாழ்க்கை விஜய் ஆண்டனிக்கு புதுப்புது தொடர்புகள் கிடைக்கக் காரணமாகிறது.
மட்டுமல்ல, புதுப்புது எதிரிகளையும் சம்பாதித்துக் கொடுக்கிறது.

சிறைவாழ்க்கைக்குப் பிறகு அரசியில்வாதிகளின் நட்பு கிடைக்க, அவற்றை புத்தி கூர்மையோடு பயன்படுத்தி அரசியலுக்குள் அடியெடுத்து வைக்கிறார்.

அரசியல்வாதியாகிவிட்ட விஜய் ஆண்டனிக்கு அடுத்தடுத்து பல பிரச்சனைகள்.
அவற்றை விஜய் ஆண்டனி எப்படி சமாளிக்கிறார்?

தன்னை தக்க வைத்துக்கொள்ள எத்தனை பேரை காவு வாங்குகிறார் என்பதுதான் ‘எமன்’ படத்தின் கதை!

சுருக்கமாகச் சொன்னால் ‘அமைதிப்படை’யின் இன்னொரு வெர்ஷன்.

விஜய் ஆண்டனியின் மேனரிஸம், பாடி லாங்வேஜ், டயலாக் டெலிவரியில் பெரிய மாற்றமில்லை.

ஆனால் நடிப்பில் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறார். நடனம் இன்னும் கற்க வேண்டும்.

இசையமைப்பாளராகவும் விஜய் ஆண்டனியின் பங்களிப்பு சிறப்பு.

விஜய் ஆண்டனிக்குப் பிறகு கவனம் பெறுவது தியாகராஜனின் கதாபாத்திரம்தான். கருணாகரன் என்ற அரசியல்வாதியாக இயல்பாக நடித்திருக்கிறார்.

கத்தி கூச்சல்போட்டு ஆர்ப்பாட்டம் பண்ணாமல் அடக்கி வாசித்திருக்கிறார்.

அவருக்கே உரிய அழுத்தம் திருத்தமான வசன உச்சரிப்பு கருணாகரன் கதாபாத்திரத்துக்கு வலிமை சேர்த்திருக்கிறது.

வில்லனாக…. அமைச்சர் தங்க பாண்டியனாக வருபவர் யார் என்று கேட்க வைத்திருக்கிறார் அருள் டி.சங்கர்.

இந்த கேரக்டரில் நடிப்பதற்காக இரண்டு வருடங்கள் தாடி வளர்க்க வேண்டிய அவசியம் என்ன என்றுதான் தெரியவில்லை.

நடிகையாக மியா ஜார்ஜ். அரசியல் படத்தில் நடிகை கதாபாத்திரம் என்பதை வைத்து என்னென்னவோ செய்திருக்கலாம்.

குறைந்தபட்சம் கொ.ப.செ. என்று கூட விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம். ஏனோ அந்த கேரக்டரை வைத்து கதையை நகர்த்த சிறு முயற்சி கூட செய்யாமல்விட்டிருக்கிறார் இயக்குநர்.

இயக்குநரான ஜீவா சங்கரே ஒளிப்பதிவும் செய்திருக்கிறார்.

ஜீவா சங்கரும் விஜய் ஆண்டனியும் முதன் முதலாக இணைந்த ‘நான்’ படத்தில் கதை மட்டுமல்ல அடுத்தடுத்து நிகழும் சம்பவங்களும் புதுசாகவும், சுவாரஸ்யம் நிறைந்ததாகவும் இருந்தன.

எமன் படத்தில் இந்த இரண்டு விஷயங்களுக்கும் இன்னும் சிறப்பாக இருந்திருந்தால் எமன்-2வுக்கும் வாய்ப்பு இருந்திருக்கும்..!
Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better