Search
Saturday 20 October 2018
  • :
  • :

வைகை எக்ஸ்பிரஸ் – விமர்சனம்

வைகை எக்ஸ்பிரஸ் – விமர்சனம்

பரபரப்பான… விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லரை படமாக எடுப்பதில் கைதேர்ந்தவர்கள் மலையாளப்பட இயக்குநர்கள்தான்.

கொலையும்… கொலை நடக்கும் சூழலும்…. அந்தக்கொலையில் புதைந்திருக்கும் மர்மமும்… அந்த மர்மத்தின் முடிச்சுகளை அவிழ்த்து கொலையாளியை கண்டுபிடிக்கும் சாமர்த்தியமும் அசர வைக்கும்.

பத்து வருடங்களுக்கு முன் கே.மது இயக்கத்தில் வெளியான ‘நாதியா கொல்லப்பட்ட ராத்திரி’  என்ற படமும் அப்படியொரு அசத்தலான க்ரைம் த்ரில்லர்.

சென்னையிலிருந்து மங்களூர் செல்லும் ஒரு ரயிலில் மூன்று பெண்கள் கொலையாவதும், அதை புலனாய்வு அதிகாரியான ஹீரோ துப்பறிவதும்தான் கதை.

அந்தப் படத்தைத்தான் தமிழுக்கு ஏற்றவாறு கொஞ்சம் மசாலாவைத் தூவி ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் ஓட விட்டிருக்கிறார்கள்.

‘எல்லாம் அவன் செயல்’, ‘என் வழி தனி வழி’ ஆகிய படங்களில் கைகோர்த்த இயக்குநர் ஷாஜி கைலாஷும், நடிகர் ஆர்.கே.யும் மூன்றாவதுமுறையாக வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தில் இணைந்துள்ளனர்.

சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் வைகை எக்ஸ்பிரஸில் ஒரு கோச்சில் பயணிக்கும் மூன்று பெண்கள் கொல்லப்படுகிறார்கள்.

தொலைக்காட்சி நிருபரான ஒரு இளம்பெண் கொல்லப்பட்டு ஓடும் ரயிலிலிருந்து வெளியே வீசப்படுகிறாள்.

நாட்டிய கலைஞரான பெண் கூபேயில் தூக்கில் தொங்குகிறாள்.

துப்பாக்கி சுடும் வீராங்கனை (நீது சந்திரா) கொலைமுயற்சியிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து  பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாத இந்த கொலைகளை கண்டுபிடிக்க வருகிறார் ரெயில்வே போலீஸ் சிறப்பு பிரிவில் பணியாற்றும் ஆர்.கே.

இந்த கேஸை விசாரிக்க வரும் ஆர்.கே., கொலைக்கு காரணமானவர்களை தன் புத்தி சாதுர்யத்தால் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் –  ‘வைகை எக்ஸ்பிரஸ்’.

விசாரணை அதிகாரி வேடம் ஆர்.கே.க்கு  செமயாக பொருந்தியிருக்கிறது. முந்தைய படங்களைவிட நன்றாகவே  நடிக்கவும் செய்துள்ளார்.

அதிரடி சண்டை காட்சிகள் பன்ச் டயலாக் என படம் முழுக்க புகுந்து விளையாடி இருக்கிறார் ஆர்.கே. ஆனாலும், வசன உச்சரிப்புகளில் இன்னும் கவனம் செலுத்தணும். முக்கியமாக, ஆங்கில வார்த்தைகளில்..!

நீது சந்திராவுக்கு இரட்டை வேடம். இரண்டு வேடங்களையும் அழகாக வித்தியாசப்படுத்தி காட்டியுள்ளார்.

தொலைக்காட்சி நிருபராககோமல் ஷர்மா, டி.டி.ஆராக எம்.எஸ்.பாஸ்கர்,  நடிகையாக இனியா, போலீஸ் அதிகாரிகளாக நாசர்,  ஜான் விஜய், அமைச்சராக சுமன்,  துணை விசாரணைஅதிகாரியாக ரமேஷ் கண்ணா, எழுத்தாளராக மனோபாலா, ரயில்வே ஊழியராக  அனூப் சந்திரன், பாடகராக  சித்திக்  என ரசிகர்களை குழப்பும்விதமாக ஏகப்பட்ட கேரக்டர்கள் இருந்தாலும் அத்தனை பேருக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

நடிகையாக வரும் இனியாவுக்கு  அதிக வேலை இல்லை!  இனியாவின் அக்காவாக நடித்திருக்கும் அர்ச்சணாவுக்கு கொடுக்கப்பட்ட பின்னணி குரல்  கொடுமையடா சாமி. ஊர்வசியின் அக்காவான மறைந்த நடிகை கல்பனாவை பேச வைத்திருக்கிறார்கள். கோவை சரளாவுக்கு கோவில் கட்டலாம் என சொல்ல வைக்கிறது கல்பனாவின் குரல்.

கொலைக்கு காரணமானவர் அவராக இருக்குமோ, இவராக இருக்குமோ என்று பல பேர் மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதும், கடைசியில் பார்வையாளர்களின் யூகப்பட்டியலில் இல்லாத ஒருவரை கொலையாளியாக காட்டுவதும் க்ரைம் த்ரில்லர் படங்களுக்கே உரித்தான பொதுவான ஃபார்முலா.

அதே ஃபார்முலாவின்படிதான் இந்தப் படத்தின் திரைக்கதையும் அமைக்கப்பட்டிருக்கிறது.

என்றாலும், நீதுசந்திரா விவகாரத்தில் யார் குற்றவாளி என்று தெரிய வரும்போது சராசரி ரசிகர்கள் அதிர்ச்சியில்  உறைந்துபோவது உறுதி.

வி. பிரபாகரின் வசனமும், சஞ்சீவ் சங்கரின் ஒளிப்பதிவும், எஸ்.எஸ். தமனின் பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளன!

ரசிகர்களின் கவனம் ஒரு கணம் கூட சிதறக்கூடாது என்ற எண்ணத்தில் யாரும் யூகிக்க முடியாத எதிர்பாராத திருப்பங்கள், எக்ஸ்பிரஸ் வேக காட்சி அமைப்புகள் என தலைப்புக்கு ஏற்ப எக்ஸ்பிரஸ் வேகத்தில் திரையில் ஓடுகிறது – ‘வைகை எக்ஸ்பிரஸ்’.
Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better