Search
Tuesday 21 August 2018
  • :
  • :

ஒரே நாளில் நான்கு படங்கள்…! தாங்குமா திரையுலகம்…?

ஒரே நாளில் நான்கு படங்கள்…! தாங்குமா திரையுலகம்…?

விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்க, தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘நானும் ரௌடிதான்’.

‘போடா போடி’ பட இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்சேதுபதியுடன் முதன் முதலாக இணைந்திருப்பது நயன்தாரா மட்டுமல்ல, இசையமைப்பாளர் அனிருத்தும்தான்.

சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

விஜய் சேதுபதி, நயன்தாரா, அனிருத், தனுஷ் என முன்னணி கலைஞர்கள் கூட்டணி அமைத்துள்ளதாலோ என்னவோ ‘நானும் ரௌடிதான்’ படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

ஆயுதபூஜை விடுமுறையை தொடர்ந்து ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.

எனவே இம்மாதம் 21 – ஆம் தேதி ‘நானும் ரௌடிதான்’ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் தனுஷ்.

அதே தேதியில்தான் விக்ரம், சமந்தாவை வைத்து ‘கோலிசோடா’ இயக்குநர் விஜய் மில்டன் இயக்கியுள்ள ’10 எண்றதுக்குள்ள’ படமும் ரிலீசாகவிருக்கிறது.

அதுமட்டுமல்ல, சந்தானம் நடித்த ‘வாலிபராஜா’ படமும் அன்றுதான் வெளியாகிறது.

எல்லாவற்றையும்விட, சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பொன்ராம் இயக்கியுள்ள ‘ரஜினி முருகன்’ படத்தையும் அன்றைய தினம் ரிலீஸ் செய்வதற்கான திட்டத்தில் இருக்கிறார் லிங்குசாமி.

மேற்கண்ட நான்கு படங்களுமே தலா 300 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் அளவுக்கு தகுதி உள்ள படங்கள்தான்.

தமிழ்நாட்டில் ரிலீஸ் சென்டர் என்று சொல்லப்படும் தியேட்டர்களின் எண்ணிக்கையோ சுமார் 750 தியேட்டர்கள்தான். ‘நானும் ரௌடிதான்’, ‘ரஜினிமுருகன்’, ’10 எண்றதுக்குள்ள’, ‘வாலிபராஜா’ ஆகிய நான்கு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் 1200 தியேட்டர்கள் தேவை. இருப்பதோ 750 தியேட்டர்கள்தான்.

எனவே ஏதாவது இரண்டு படங்கள் அல்லது அதிகபட்சமாக மூன்று படங்கள் மட்டுமே அக்டோபர் 21 அன்று வெளியாகும்.

பின்வாங்கப்போகும் படம் எது?




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better