Search
Wednesday 24 October 2018
  • :
  • :

உத்தம வில்லன் – விமர்சனம்

உத்தம வில்லன் – விமர்சனம் உத்தம வில்லன் – விமர்சனம்

கமல்ஹாசனின் ஒவ்வொரு முயற்சியும் தமிழ்சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு அழைத்துச் செல்லக் கூடியவை.

உத்தமவில்லன் திரைப்படமும் அப்படிப்பட்டதொரு பெருமைக்குரிய படைப்பாகவே இருக்கிறது.

சமகாலத்தில்  நிகழும் கதையில், 8 ஆம்  நூற்றாண்டு காலத்து கதையையும் கலந்து தமிழ்சினிமாவில் இதற்கு முன் அனுபவித்திராத புதிய அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார் கமல்.

மனோரஞ்சன்  மிகப் பெரிய  நட்சத்திரமாக உருவாகக் காரணமாக இருப்பவர் தயாரிப்பாளர் பூர்ணசந்திர ராவ்.

அதற்கு விலையாக தன் காதலை பலி கொடுத்துவிட்டு அவரது மகளையே மணக்கிறார் மனோரஞ்சன்.

மனோரஞ்சனைக் கண்டெடுத்து அவரை நடிகனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் மார்கதரிசி.

பூர்ணசந்திரராவின் மருமகனான பிறகு மார்கதரிசியையும் மறந்துவிட்ட மனோரஞ்சன், திடீரென அவரைத் தேடிப்போகிறார்.

அவருடன் இணைந்து ஒரு படம் நடிக்க வேண்டும் என விருப்பத்தை வெளிப்படுத்துகிறார்.

மார்கதரிசி மறுக்க, தனக்கு மூளையில் கட்டி உள்ளதால் விரைவில் மரணம் என்ற அதிர்ச்சித் தகவலைச் சொல்லி மார்கதரிசியை சம்மதிக்க வைக்கிறார்.

மனோரஞ்சன் நடிக்க மார்கதரிசி இயக்கத்தில் உத்தம வில்லன் என்ற நகைச்சுவை (இல்லாத) படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

8 ஆம் நூற்றாண்டில் நடக்கும் உத்தம வில்லனில் உத்தமன் என்ற கூத்துக்கலைஞனே நாயகன்.

பாம்பு கடித்தும்…. நீர்வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்டும், மரணத்தை வென்றவன்.

உத்தமனைப் பற்றிக் கேள்விப்படும் முத்தரசன் என்ற சர்வாதிகார மன்னன், இளவரசி கற்பகவல்லியைச் சுற்றி நிகழும் கதையில் சுவாரஸ்யமில்லை.

சுவாரஸ்யம் மட்டுமல்ல, மனசை கனக்க வைக்கும் உணர்ச்சிகரமான சம்பவங்களும், உருக்கமும் சமகாலக்கதையில்தான்.

துவக்கக் காட்சிகளில்  ஒரு குடிகாரனாக அறிமுகமாகிற மனோரஞ்சன்..அடுத்தடுத்த காட்சிகளில் சாவை எதிர்நோக்குகிறவனாகிறபோது…கண்கள் கசியத் தொடங்குவதை கட்டுப்படுத்துவது கடினம்.

தனக்கு வந்த நோயை மார்கதரிசி, தன் மாமனார், மகனிடம் மனோரஞ்சன் தெரியப்படுத்தும் காட்சிகளில் உணர்ச்சிமயத்தின் உச்சம். முக்கியமாக மகனின் கழுத்தைக்கட்டிக் கொண்டு தன்நிலை உணர்த்தும்போது….

8 ஆம் நூற்றாண்டு கூத்துக் கலைஞன் உத்தமன், சமகாலத்தில் தமிழ்சினிமாவில் சூப்பர்ஸ்டாராக விளங்கும் மனோரஞ்சன் என இரண்டு வேடங்களில் கமல்.

உத்தமனாக கலகலக்கவும், மனோரஞ்சனாக கலங்கவும் வைத்திருக்கிறார்.

நிகழ்காலத்தில் நடிகையாகவும், சரித்திரக்கதையில் இளவரசியாகவும் பூஜா குமார்.

மனோரஞ்சனின் குடும்ப டாக்டராக ஆண்ட்ரியா. அவரே சொல்வதுபோல் கள்ளக்காதலியாகவும்.

மனோரஞ்சனை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்திய குருவாக, திரைப்பட இயக்குநராக, கமலை கதாநாயகனாக உயர்த்திய கே. பாலசந்தரே நடித்திருக்கிறார். தன் சிஷ்யனுக்கு மரணம் நெருங்குவதை அறிந்ததும் அவர் படும் வேதனையும், துடிப்பும்…. இயக்குநர் சிகரத்துக்குள் நடிப்புச் சிகரமும் இருந்திருப்பதை உணர்த்தும் காட்சிகள் அவை.

உத்தமவில்லன் படத்தில் கமல் நடிகர் மட்டுமல்ல, கதை வசனகர்த்தாவாகவும் பங்களித்திருக்கிறார். திரைக்கதையை விடுங்கள். வசனத்தில் கவனம் ஈர்த்திருக்கிறார். பல இடங்களில் மனசில் தாக்கும் வசனங்கள். சில இடங்களில் மயிலாப்பூர் வசனங்கள்.

ரமேஷ் அரவிந்தின் இயக்கம், ஜிப்ரானின் இசை, ஷம்தத்தின் ஒளிப்பதிவு, லால்குடி இளைராஜாவின் கலை இயக்கம், விஜய் சங்கரின் படத்தொகுப்பு இன்ன பிற அம்சங்கள் அனைத்தும் உத்தம வில்லனை உத்தமமான படைப்பாக்கி இருக்கின்றன.
Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better