Search
Thursday 19 July 2018
  • :
  • :

தமிழகமெங்கும் போலீஸ் எதிர்ப்பலை… – சிக்கலில் சிங்கம்-3

தமிழகமெங்கும் போலீஸ் எதிர்ப்பலை… –  சிக்கலில் சிங்கம்-3

நிஜத்தில் காவல்துறையின் லட்சணம் நாம் அறிந்ததுதான்.

ஆனால் திரைப்படங்களில் காவல்துறையினர் குறித்த சித்தரிப்பு முற்றிலும் வேறாகவே இருக்கின்றன.

குறிப்பாக  படத்தின் கதாநாயகனுக்கோ… அல்லது முக்கிய வேடம் ஏற்ற நடிகருக்கோ போலீஸ் கதாபாத்திரம் என்றால்…. சொல்லவே வேண்டாம்.

போலீஸ் புகழ்பாடியே பொறுமையை சோதித்துவிடுவார்கள்.

நிஜத்தில் போலீஸ் எப்படிப்பட்டவர்கள் என்பதை நன்கு அறிந்தவர்களால் தமிழ்சினிமாவில் காட்டப்படும்  ‘நேர்மை போலீஸ்’ என்ற அபத்தத்தை சகித்துக் கொள்ளவே முடியாது.

சூர்யாவின் நடிப்பில் தயாராகி விரைவில் வெளிவரவிருக்கும் சிங்கம்-3 படமும் நேர்மையான போலீஸ் அதிகாரி பற்றிய படம்தான்.

சிங்கம், சிங்கம்-2 ஆகிய இரண்டு படங்களிலும் துரைசிங்கம் என்ற கடமை தவறாத காவல்துறை அதிகாரியாக நடித்த சூர்யா, சிங்கம்-3 படத்திலும் அதே கதாபாத்திரத்தில்தான் நடித்திருக்கிறார்.

கடமை, நேர்மை என்று படம் முழுக்க போலீஸ் பெருமையைப் பேசுகிற சிங்கம் -3  படம் கடந்த டிசம்பர் மாதமே வெளிவந்திருக்க வேண்டிய படம்.

பின்னர் பொங்கலுக்கு தள்ளி வைக்கப்பட்டு, பிறகு ஜனவரி 26 ஆம் தேதி ரிலீஸ் என்று சொல்லப்பட்டு… 11 கோடிக்கு தெலுங்கு டப்பிங் ரைட்ஸ் வாங்கிய விநியோகஸ்தரின்  கோரிக்கை காரணமாக இப்போது பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த இடைப்பட்ட நாட்களில் தமிழ்நாட்டின் க்ளைமேட்டே முற்றிலும் மாறிவிட்டது.

அதாவது ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக அணி திரண்டு அறவழியில் போராட்டம் நடத்திய மாணவர்களையும், இளைஞர்களையும், ஒடுக்கும் முயற்சியில் அராஜகமாக செயல்பட்டது காவல்துறை.

பல இடங்களில் வன்முறை வெறியாட்டத்திலும் காவல்துறையினரே ஈடுபட்டனர்.

ஆட்டோ, கார்களுக்கும், வீடுகளுக்கும் காவல்துறையினரே தீவைத்தனர்.

அப்பாவி மக்களின் உடமைகளை உடைத்து  சேதப்படுத்தினர்.

காவல்துறையினரின் இத்தனை அராஜகங்களையும் மக்கள் படம் பிடித்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தனர்.

இன்னொரு பக்கம், காவல்துறையினரின் வன்முறை வெறியாட்டம் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது.

இதனால் மக்கள் மத்தியில் அசிங்கப்பட்டு…. அம்பலப்பட்டு நிற்கின்றனர் காவல்துறையினர்.

இப்படியொரு சூழலில்தான் போலீஸ் பெருமை பேசும் சிங்கம்- 3 படம் வெளிவரவிருக்கிறது.

ஜனவரி 26 அன்று ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய சிங்கம்-3 படத்தை  பிப்ரவரி 3 அன்று வெளியிட இருந்தனர்.

இந்நிலையில் போலீஸ் அராஜகம் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் இந்த நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்வது நல்லதல்ல என்பதால் பிப்ரவரி 10 ஆம் தேதிக்கு சிங்கம்-3 படத்தை தள்ளி வைக்க ஆலோசித்து வருவதாக தகவல்.

என்னதான் ஓரிரு வாரங்கள் தள்ளி வெளியானாலும் போலீஸ் புகழ்பாடும் சிங்கம்-3 படத்தை மக்கள் வரவேற்பார்களா என்பது சந்தேகம்தான்…




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better