Search
Monday 17 December 2018
  • :
  • :

ஜல்லிக்கட்டுக்காக சீறிய சிங்கம்…

ஜல்லிக்கட்டுக்காக சீறிய சிங்கம்…

தமிழர்களுக்கு எதிரான வேலைகளில் ஈடுபட்டு வரும் ‘பீட்டா’ அமைப்பை தடை செய்யக்கோரியும், ஜல்லிக்கட்டுக்கான உச்ச நீதிமன்றத்தின் தடையை நீக்கக்கோரியும்,  தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன.

பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களைத் தொடர்ந்து நேற்று முதல் சென்னை மெரினா பீச்சில் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும் திரண்டு வந்து  போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த மயில்சாமி, இயக்குனர்கள் அமீர், வ.கௌதமன் போன்ற தமிழ் உணர்வாளர்களும், இந்த கூட்டத்தை தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்ளும் இடமாக எண்ணி ஜி.வி.பிரகாஷ் குமார், டி.ராஜேந்தர், ஆர்யா போன்றவர்களும் கலந்து கொண்டு வருகின்றனர்.

தன்னுடைய சிங்கம்-3 படம் அடுத்தவாரம் வெளிவரும்நிலையில் தற்போது நடிகர் சூர்யாவும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உணர்வோடு நானும் கைகோர்க்கிறேன்… என்று தொடங்கும் அந்த அறிக்கையில்…

‘‘பண்பாடு, அடையாளம், வரலாறு போன்ற வார்த்தைகளை இதுவரை அறிஞர்களும், தலைவர்களும் மட்டுமே உச்சரித்துக் கொண்டிருந்தார்கள்.

இப்போது சாதாரண மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் தங்களின் பண்பாடு, அடையாளம், வரலாறு குறித்து பேசுவதற்கு காரணமாக ‘ஜல்லிக்கட்டு’ மாறி இருக்கிறது.

‘ஜல்லிக்கட்டு நடத்த தடை’ வாங்கி, பொதுப்பிரச்சனைகளுக்கு இளைஞர்களை ஒன்றுகூடி போராட தூண்டிய அனைவருக்கும் நன்றிகள்!

‘தன்னெழுச்சியான’ போராட்டங்களில் எப்போதுமே உண்மை இருக்கும்.

பல நூற்றாண்டுகளாக, தமிழகத்தில் நடந்து வருகிற ஜல்லிக்கட்டு, ‘மாடுகளுக்கு எதிரானது’ என்று பொய்ப்பிரச்சாரம் செய்து நீதிமன்றத்தில் வெற்றியும் பெற்ற ‘பீட்டா’ அமைப்பு, மக்கள் மன்றத்தில் தோற்றிருக்கிறது.

‘நாட்டு மாடு இனம்’ அழிவதற்கு துணைபோகிறவர்கள், ‘ஜல்லிக்கட்டு மூலம் மாடுகள் வதை செய்யப்படுகின்றன’ என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

சட்டமும், ஆட்சியும் மக்களுக்காக உருவாக்கப்பட்டவை. நமது விரல் எடுத்து நமது கண்களைக் குத்திக்கிழிக்கிற முயற்சிகளை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

ஆயிரக்கணக்கான இளைஞர்களின் போராட்டத்தில், ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வும் எதிரொலிக்கிறது.

அமைதியான வழியில் நமது உரிமைகள் நிலைநாட்ட போராடுகிற அனைவருக்கும் என் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறேன்.

போராடுகிறவர்களின் உணர்வோடு நானும் கைகோர்க்கிறேன்.

மக்களின் போராட்டம் வெற்றிபெற்று ‘ஜல்லிக்கட்டு’ விரைவில் நடைபெறும். எதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், ஜல்லிக்கட்டு நடைபெற்றதும் நமது போராட்டம் வெற்றிபெற்றதாக நினைத்து அமைதியாகிவிடக்கூடாது. நமது பண்பாட்டையும், அடையாளத்தையும் அழிக்கும் முயற்சிகள் வேறு எந்த வடிவில் வந்தாலும், இதேபோல ஒன்றுபட்டு குரல் கொடுப்போம்.” என்று தெரிவித்திருக்கிறார் சூர்யா.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better