Search
Tuesday 21 August 2018
  • :
  • :

சிவகார்த்திகேயன் மீது கமல் ரசிகர்கள் தாக்குதல்… கமலுக்கு சில கேள்விகள்…

சிவகார்த்திகேயன் மீது கமல் ரசிகர்கள் தாக்குதல்… கமலுக்கு சில கேள்விகள்…

கடந்த வாரம் மதுரை விமானநிலையத்தில் கமல் ரசிகர்களால் நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து விசாரித்தபோது…

சம்பவம் நடைபெற்ற தினத்துக்கு முந்தைய தினம் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சிம்ப்ளி குஷ்பூ என்ற நிகழ்ச்சியில் ரஜினியை மிக உயர்வாக குறிப்பிட்டு சிவகார்த்திகேயன் பேசியதை பொறுத்துக் கொள்ள முடியாத கமல் ரசிகர்கள் அவரை தாக்கினார்கள் என்றே முதல் தகவல் வெளியானது.

அதன் பிறகு, தாக்குதலுக்கு காரணம் அதுவல்ல என்றும், எட்டு மாதங்களுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதியை டபுள் மீனிங்கில் சிவகார்த்திகேயன் கமெண்ட் அடித்ததாகவும், அதனால்தான் கமல் ரசிகர்கள் கோபத்தில் பொங்கி எழுந்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் சொல்லப்பட்டது.

இதே தகவல் சில இணையதளங்களில் வெவ்வேறு வடிவங்களில் செய்திகளாக வெளியாகின.

கமலின் ஊடகத் தொடர்பாளரும் இந்த காரணத்தையே சொன்னார்.

அதோடு, குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியின் வீடியோவை விஜய் டிவியில் கேட்டிருப்பதாக கூடுதல் தகவலையும் தெரிவித்தார்…

தமிழ்சினிமாவில் ஹீரோக்களாக இருக்கும் பல இளம் ஹீரோக்கள் ரஜினியின் ரசிகர்களே.

அஜித், விஜய் உட்பட பல ஹீரோக்கள் தங்களை ரஜினியின் ரசிகர்களாகவே காட்டிக் கொள்கிறார்கள்.

அப்படித்தான் சிவகார்த்திகேயனும் தன்னை ரஜினி ரசிகராக வெளிப்படையாகக் காட்டிக் கொள்கிறார்.

எனவே, ரஜினியை உயர்வாகப் பேசியதற்காக அவரை கமல் ரசிகர்கள் தாக்கியதாக சொல்வது நம்பும்படி இல்லை, அதை ஏற்கவும் முடியாது.

அடுத்த காரணம்… ஸ்ருதிஹாசனை டபுள் மீனிங்கில் பேசினார் என்பது.

இதுவும் அடிப்படையற்ற குற்றச்சாட்டாகவே தோன்றுகிறது.

காரணம்.. சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவிருக்கும் புதுப்படத்தின் கதாநாயகியே ஸ்ருதிஹாசன்தான்.

ஒரு வாதத்துக்காக… சிவகார்த்திகேயன் ஸ்ருதிஹாசனை டபுள் மீனிங்கில் பேசியதாக வைத்துக் கொள்வோம்.

தன்னை அசிங்கமாகப் பேசிய சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பாரா?

ஆக.. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிப்பதை வைத்தே இந்தக் காரணமும் கட்டுக்கதை என்பது உறுதியாகிறது.

அது மட்டுமல்ல, ஸ்ருதிஹாசனை டபுள் மீனிங்கில் சிவகார்த்திகேயன் பேசியதாக சொல்லப்படும் குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஏறக்குறைய எட்டு மாதங்களாகிறது.

அதன் பிறகு மதுரைக்கு 80 தடவைக்கு மேல் போய் வந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

அவரது மனைவியின் ஊரே மதுரைதான். படப்பிடிப்பு இல்லை என்றால், குடும்பத்துடன் அடிக்கடி மதுரை சென்று வருகிறார் சிவகார்த்திகேயன்.

தவிர, ‘ரஜினி முருகன்’ படத்தின் படப்பிடிப்பு மதுரையில் ஏறக்குறைய 90 நாட்கள் நடைபெற்றன.

90 நாட்களும் ஆரப்பாளையம் உட்பட பல ஏரியாக்களில் தெருக்களில்தான் நடைபெற்றது.

அப்போதெல்லாம் கமல் ரசிகர்களுக்கு வராத கோபம், ரோஷம் ஏறக்குறைய எட்டு மாதங்களுக்குப் பிறகு வெடித்துக் கிளம்பியது ஏன்?

திருச்செங்கோட்டில் உள்ள தினத்தந்தி குழுமத்தின் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கமல், சிவகார்த்திகேயன் இருவரும் ஒரே விமானத்தில்தான் மதுரைக்கு சென்றனர்.

குறிப்பிட்ட அந்த விமானத்தில் கமல் வருவது, மதுரையில் உள்ள கமல் ரசிகர்களுக்கு தெரிந்தது எப்படி?

எப்படியோ கேள்விப்பட்டு மதுரை விமானநிலையத்துக்கு வந்தார்கள் என்று வைத்துக்கொண்டாலும், கமல் வந்திறங்கியபிறகு அவருக்குப் பின்னால் வாழ்க கோஷம் போட்டபடி போகாமல் ‘சிவகார்த்திகேயனுக்காக காத்திருந்தது’ ஏன்?

சிவகார்த்திகேயனும் அதே விமானத்தில்தான் வருகிறார் என்ற தகவலை அவர்களுக்கு சொன்னது யார்?

தன் ரசிகர்களால் தாக்கப்பட்ட சிவகார்த்திகேயனிடம் தார்மீக பொறுப்பேற்று கமல் வருத்தம் கூட தெரிவிக்கவில்லையே ஏன்?

சிவகார்த்திகேயனை தாக்கிய அந்த ரசிகர் யார்? என்பதை கமல் நினைத்திருந்தால் ஒரு மணி நேரத்தில் கண்டு பிடித்திருக்க முடியும்.

கண்டுபிடித்து அவரை கண்டித்தோ அல்லது சிவகார்த்திகேயனிடம் மன்னிப்போ கேட்க வைத்திருக்க முடியும்?

இதை எல்லாம் கமல் ஏன் செய்யவில்லை?

சிவகார்த்திகேயன் மீதான தாக்குதல் குறித்து கமலிடம் சொல்லப்பட்டிருக்கும் தகவல் என்ன?

இந்த கேள்விகளுக்கான விடையை கமல் யோசிக்க ஆரம்பித்தாலே கமலுக்கு உண்மையும் புரியும்.

உண்மைக்குற்றவாளியும் யார் எனத் தெரியும்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better