Search
Saturday 15 December 2018
  • :
  • :

“ரஜினிமுருகன்” படத்துக்கு இன்று இரவு 7 மணி வரை கெடு…!

“ரஜினிமுருகன்” படத்துக்கு இன்று இரவு 7 மணி வரை கெடு…!

சிவகார்த்திகேயனின் அசுர வளர்ச்சியே அவருக்கு திருஷ்டியாகிவிட்டதோ என்று கடவுள் நம்பிக்கையாளர்கள் நினைக்கிற அளவுக்கு அவரது ‘ரஜினி முருகன்’ படம் சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிறது.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான சிவகார்த்திகேயன் – இயக்குநர் பொன்ராம் – இசையமைப்பாளர் இமான் மீண்டும் இணைந்துள்ள படம் என்பது மட்டுமின்றி, ‘ரஜினிமுருகன்’ என்ற தலைப்பும் ரசிகர்கள் மத்தியில் அப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இன்றைய தேதிக்கு ‘புலி’ படத்தைவிட ‘ரஜினி முருகன்’ படமே ரசிக எதிர்பார்ப்பில் முன்னணியில் உள்ளது.

திட்டமிட்டபடி ‘ரஜினி முருகன்’ தியேட்டருக்கு வந்தால், வசூலைக்குவித்துவிடும் என்பதே உண்மையான நிலவரம்.

செப்டம்பர் 17 அன்று ‘ரஜினிமுருகன்’ படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றநிலையில் தற்போது திடீர் திருப்பமாக செப்டம்பர் 17 அன்று படம் வெளிவரவாய்ப்பில்லை என்ற தகவல் அடிபட்டு வருகிறது.

என்ன காரணம்?

கமலை வைத்து ‘உத்தமவில்லன்’ படத்தை தயாரித்த லிங்குசாமிக்கு அப்படத்தினால் மிகப்பெரிய பொருளாதார பின்னடைவு ஏற்பட்டது.

‘உத்தமவில்லன்’ படத்தை எப்படியாவது வெளியிட்டாக வேண்டிய நிர்பந்தத்தில் வேறுவழியில்லாமல் ‘ரஜினி முருகன்’ படத்தின் பேரில் பல கோடிகளை வாங்கி அப்போது நிலமையை சமாளித்தார் லிங்குசாமி.

அந்த கடன் இப்போது வட்டியும் குட்டியும் போட்டு 98 கோடி ரூபாயாக வளர்ந்து நிற்கிறது.

இந்த 98 கோடியில் சுமார் 50 கோடி ஈராஸ் நிறுவனத்திடம் வாங்கிய கடன்.

இது தவிர மதுரை அன்புவுக்கும், ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜாவுக்கும் பல கோடிகள் கொடுக்க வேண்டுமாம்.

அண்மையில் மும்பை சென்று ஈராஸ் நிறுவன அதிகாரிகளை சந்தித்து கடன் தொகையில் வட்டித்தொகையாக சில கோடிகளை குறைத்துக் கொள்ளும்படி கேட்டாராம் லிங்குசாமி. அதற்கு ஈராஸ் நிறுவனம் மறுத்துவிட்டது. தனக்குத் தர வேண்டிய பணத்தைக் கொடுத்தால்தான் ‘ரஜினி முருகன்’ படத்தை ரிலீஸ் பண்ண க்ளியரன்ஸ் தருவோம் என்று உறுதியாக சொல்லிவிட்டது.

அடுத்த முயற்சியாக ‘ரஜினி முருகன்’ படத்தின் சென்னை ஏரியாவை வாங்கிய அபிராமி ராமநாதன் மூலம் தற்போது ஈராஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

‘ரஜினி முருகன்’ படம் வெளியானால்தான் லிங்குசாமி கைக்கு பணம் வரும்… அப்படி வந்தால்தான் உங்கள் கடனை அடைக்க முடியும் என்று சில லாஜிக் பாயிண்ட்களை எடுத்து வைத்திருக்கிறார் ராமநாதன். ஈராஸ் தரப்பில் இன்னமும் மௌனம் நீடிக்கிறது.

இற்கிடையில் ‘ரஜினி முருகன்’ படம் செப்டம்பர் 17 அன்று வெளிவராதபட்சம் ‘மாப்ள சிங்கம்’ படத்தை எஸ்கேப் மதனும், ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜாவும் ரிலீஸ் பண்ணத் தயாராக இருக்கிறார்கள்.

‘ரஜினி முருகன்’ படத்தின் இறுதிநிலவரம் உறுதியாக தெரியாததினால் இவர்களும் கையைக் கட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இன்று இரவு 7 மணிவரை பொறுத்திருங்கள்… ‘ரஜினி முருகன்’ ரிலீஸ் பற்றி இறுதி முடிவை சொல்லிவிடுகிறோம் என்று லிங்குசாமி தரப்பு கேட்டுக்கொண்டிருப்பதால் கடிகாரத்தைப் பார்த்தபடி காத்திருக்கின்றனர் எஸ்கேப் மதனும், ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜாவும்.
Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better