Search
Monday 18 December 2017
  • :
  • :

ஆகஸ்ட் மாதத்துக்குள் திருட்டு விசிடி இருக்காது…! – விஷால் சொல்லும் ஆருடம்…

ஆகஸ்ட் மாதத்துக்குள் திருட்டு விசிடி இருக்காது…! – விஷால் சொல்லும் ஆருடம்…

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு  நடைபெற்ற தேர்தலில், விஷால் தலைமையில் போட்டியிட்ட ‘நம்ம அணி’ வெற்றி பெற்றது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் வெற்றி பெற்றார்.

துணைத் தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன், கவுரவ செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஞானவேல்ராஜா  ஆகியோர் பெற்றி பெற்றனர்.

விஷால் அணியில் இருந்து பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட எஸ்.ஆர்.பிரபு வெற்றி பெற்றார்.

புதிய நிர்வாகிகளின் பதிவேற்பு விழா சென்னையிலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

புதிய நிர்வாகிகளுக்கு ராஜ்கண்ணு, எஸ்.ஏ.சந்திரசேகரன், கே.டி.குஞ்சுமோகன், ராஜ்கிரண், தாணு, கேயார், ஏ.எல்.அழகப்பன், டி.சிவா ஆகியோர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினர்.

ரஜினி அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்  சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற விஷால், பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன், எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜா, கதிரேசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். தயாரிப்பாளர்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அந்த கடவுள் உங்களுக்கு துணை புரிவார். என்னுடைய வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

“உண்மையான நாயகன் விஷால். இந்த சினிமாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிற நாயகன். தயாரிப்பாளர் சங்கத்துக்கு மறுமலர்ச்சி ஏற்படக்கூடிய காலம் இது. ஒரே வருடத்தில் 2 அதிசயங்கள் நடைபெற்றுள்ளன. நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் என இரண்டையுமே விஷால் அணி கைப்பற்றியுள்ளது.” என்று பாராட்டினார் எடிட்டர் மோகன்.

தலைவராக பொறுப்பேற்றவுடன் உரையாற்றிய நடிகர் விஷால்…

“இது ஒரு மிகப்பெரிய குடும்பம். அதனால்தான் அனைத்து சங்கங்களும் வந்து வாழ்த்து தெரிவித்தார்கள். மாற்றம் வேண்டும் என்ற நம்பிக்கையால் நாங்கள் வந்துள்ளோம். தாணு சார், கேயார் சார், எஸ்.ஏ.சி சார் உட்பட அனைவரும் வந்து வாழ்த்தியதற்கு நன்றி. தமிழ் சினிமாவிற்கு பொற்காலம் பிறந்துவிட்டது.

யார் வந்தாலும் நல்லது செய்ய வேண்டும் என்று உழைக்கிறோம். இன்றைக்கு முதல் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தயாரிப்பாளர்கள் என்ற முதலாளியை எப்படி காப்பாற்றுவது என்று பேசினோம். நலிந்த என்ற வார்த்தையே இருக்க கூடாது. எங்களுடைய அணி 24 மணி நேரம் உழைக்கப் போகிறது.

உறுப்பினர்களுக்கு பென்சன் தொகையை முதலில் செயல்படுத்தவுள்ளோம். விவசாயிகள் பிரச்சினைக்கு ஏதாவது உதவ வேண்டும் என்று பேசினோம். தயாரிப்பாளர் சங்கம் சார்பாக, தமிழ்நாட்டில் திரையரங்கில் ஏதாவது ஒரு நாளில் ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் எடுத்து கொடுக்கவுள்ளோம். அது எத்தனை கோடி வரும் என எனக்கு தெரியாது. அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். அதில் வரும் மொத்த தொகையையும் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு கொடுக்கப்படும்.

அனைத்து சங்கங்களும் இணைந்தால் இன்னும் விவசாயிகளுக்கு நிறைய நல்லது செய்யலாம். தலைப்பு, சென்சார், வரிச்சலுக்கை உள்ளிட்ட அனைத்து விஷயங்களும், அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் பொதுவானதாக செயல்படும்.

திருட்டு விசிடிக்கு எதிராக ஒரு நல்ல விஷயம் நடைபெறவுள்ளது. அது குறித்த முறையான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும்.

இந்த ஒற்றுமையை வைத்து நிறைய விஷயம் செய்யலாம். நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. உங்களுக்காக உழைப்பேன். நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இணைந்து ஒரு பிரம்மாண்டமான விருது விழா நடத்தவுள்ளோம். இந்தாண்டே அவ்விழா நடத்தி 10 கோடி வரை தயாரிப்பாளர் சங்கத்துக்கு நிதி திரட்டுவோம்.

ஒட்டு மொத்த இந்திய திரையுலகம் ஒன்றிணைந்து இளையராஜா நிகழ்ச்சிக்கு ‘இசைவோம்’ என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தவுள்ளோம்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better