Search
Tuesday 19 December 2017
  • :
  • :

ஒரு முகத்திரை – விமர்சனம்

ஒரு முகத்திரை – விமர்சனம்

ஒரு ஹீரோவின் படம் வெற்றியடைந்துவிட்டால் போதும். அவர் நடித்து பல வருடங்களாக கிடப்பில் கிடக்கும் பழைய படங்களை எல்லாம் தூசு தட்டி ரிலீஸ் செய்வார்கள்.

ரஹ்மான் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான ‘துருவங்கள் பதினாறு’ படம் கமர்ஷியலாக வெற்றியடைந்தது.

அதைத் தொடர்ந்து  ரஹ்மான் நடித்த பழைய படங்களை எல்லாம் தூசு தட்ட ஆரம்பித்துவிட்டனர்.

சில வாரங்களுக்கு முன் ‘பகடி ஆட்டம்’ என்றொரு படம் வெளிவந்ததைத் தொடர்ந்து, இதோ இப்போது…‘ஒரு முகத்திரை’.

மனோதத்துவ நிபுணர்களில் பலர் பாதிமனநோயாளியாக இருப்பார்கள் என்று சொல்லப்படுவது உண்டு.

ஒரு முகத்திரை படத்தின் கருவே இதுதான்.

பிரபல மனோதத்துவ மருத்தவரான ரஹ்மானை  கல்லூரிக்கு அழைத்து வரவேண்டும் என்று கல்லூரி நிர்வாகி பாண்டு விரும்புகிறார்.

அந்தக் கல்லூரியில் மனநல மருத்துவம் படிக்கும் அதிதி ஆச்சார்யா, ஸ்ருதி இருவரிடமும் அந்த பொறுப்பை ஒப்படைக்கிறார்.

தான் நேரில் பார்க்காத தனது பேஸ்புக் நண்பர் ரோஹித் மூலமாக அதிதி ஆச்சார்யாவும், தனக்கு வேண்டிய ஒருவர் மூலமாக ஸ்ருதியும் ரஹ்மானை கல்லூரிக்கு அழைத்து வர முயற்சி செய்கிறார்கள்!

கல்லூரிக்கு வரும் ரஹ்மானுக்கு, அதிதி உடன் பழக்கம் ஏற்படுகிறது.

ஃபேஸ்புக் நண்பரான ரோஹித்தை நம்பி சென்னை வந்த அதிதியை தற்செயலாக சந்திக்கும் ரஹ்மான், அவருக்கு உதவு செய்யும் பொருட்டு அவரை தன் வீட்டிலேயே தங்க வைக்கிறார்.

யார் அந்த ரோஹித்? சென்னைக்கு அழைத்த ரோஹித், அதிதியை சந்திக்காமல் விலகிப்போனது ஏன்? போன்ற கேள்விகளுக்கான விடைதான்  ‘ஒரு முகத்திரை’.

முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் ஃபேஸ்புக் மூலம்  நட்பை ஏற்படுத்திக் கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகளை சொல்லும் கதையில், ஒரு சைக்கியார்ட்டிஸ்ட்  சைக்கோவானால் என்னவாகும் என்பதையும் பரபரப்பாக சொல்லி இருக்கிறார் புதுமுக இயக்குநர் செந்தில்நாதன்!

படத்தின் முதல் பாதியில் அநியாயத்துக்கு பொறுமையை சோதிக்கிற காட்சிகள்.

இரண்டாம் பாதியில்தான் சைக்கோ படங்களுக்கே உரிய பரபரப்புடன் படம் வேகம் எடுக்கிறது!

நல்லவராக நடிக்கும் டாக்டர்(ரஹ்மான்)தான், ரோஹித் என்ற பெயரில் தன்னை ஏமாற்றி வந்தார் என்று அதிதிக்கு தெரிய வந்த பிறகு நிமிர்ந்து உட்கார வைக்கிறது திரைக்கதை.

தன்னை ரஹ்மான் ஏமாற்றியது தெரிந்து, விலகிப்போகாமல், அவர் பாணியிலேயே ரஹ்மானை பழிவாங்க அதிதி முடிவெடுப்பதும், அதன் தொடர்ச்சியான காய் நகர்த்தல்களும் சுவாரஸ்யமான திருப்பம்.

யூகத்துக்குள் அடங்காத க்ளைமேக்ஸ் ஒரு முகத்திரை படத்தை ஞாபகத்தில் வைத்திருக்க செய்யும்.

படத்தின் மிகப்பெரிய பலம் மனநல மருத்துவராக வரும் ரஹ்மான்தான். அந்தக் கேரக்டரை உள்வாங்கி அற்புதமாய் வெளிப்படுத்தி இருக்கிறார்.

அதிதி, ஸ்ருதி இருவரின் நடிப்பைவிட இளமையே நினைவில் நிற்கிறது.

சரவண பாண்டியனின் ஒளிப்பதிவும், பிரேம்குமார் சிவபெருமானின் இசையும், எஸ்.பி.அஹமதின் படத்தொகுப்பும் ஓரளவு கைகொடுத்திருக்கின்றன.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better