Search
Wednesday 24 October 2018
  • :
  • :

“குற்றம் கடிதல்” – விமர்சனம்…!

“குற்றம் கடிதல்” – விமர்சனம்…! “குற்றம் கடிதல்” – விமர்சனம்…!

பாலியல் பாடம் நடத்தி வரும் திரைப்படங்களுக்கு மத்தியில் பாலியல் பாடம் குறித்த உண்மையான அக்கறையுடன் ஆரோக்கியமான விவாதத்தை கிளப்பி இருக்கிறது – ‘குற்றம் கடிதல்’.

பாலியல் கல்வி தேவையா… தேவையில்லையா என்பது குறித்த விவாதங்கள் நீண்டகாலமாகவே நடைபெற்றுவருகின்றன.

வாதப்பிரதிவாதங்கள் இன்னும் முடிவடைந்தபாடில்லை.

‘குற்றம் கடிதல்’ காட்சி வழியே அழுத்தமானதொரு கருத்தை நம் முன் வைத்திருக்கிறது.

சேட்டைக்கார சிறுவன் ஒருவன், தன்னோடு படிக்கும் சக மாணவிக்கு ஹேப்பி பர்த் டே சொல்லி முத்தம் கொடுத்துவிடுகிறான்.

மாணவி அழ, அவனிடம் விளக்கம் கேட்கும் டீச்சரிடம், “உங்களுக்கு பர்த்டேவாக இருந்தாலும் உங்களுக்கும் முத்தம் கொடுப்பேன்” என்கிறான்.

அவனது பதில் டீச்சரை கோபப்பட வைக்கிறது.

பொளேர் என அவன் கன்னத்தில் அறைகிறார்.

மயக்கம் போட்டு விழுகிறான் மாணவன்.

மூக்கிலிருந்து ரத்தம் ஒழுக, ஆம்புலன்ஸ், ஆஸ்பத்திரி, ஆபரேஷன்….

அவன் பிழைப்பானா? மாட்டானா என்கிற பதைப்பு ஒருபக்கம்….

“பையனுக்கு என்ன வேணும்னாலும் நடக்கலாம். நீங்க இங்க இருக்க வேணாம்.. மொதல்ல கிளம்புங்க”

என்ற பிரின்ஸிபால் பேச்சைத்தட்டமுடியாமல் கொல்லிமலைக்குக் கிளம்பும் டீச்சர் மெர்லின் மற்றும், அவரது கணவரின் குற்றஉணர்ச்சி இன்னொரு பக்கம்…

அடிபட்ட மாணவனை மருத்துவமனையில் சேர்த்து விட்டு, அவனது பெற்றோர் உறவினர்களின் கோபத்தில் பதில் சொல்லமுடியாமல் கூனிக்குறுகி, மாணவன் பிழைத்துவிட வேண்டுமே என்று பரிதவிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர், அவரது மனைவி…

தன் தங்கை மகனை அடித்த டீச்சரைத்தேடி அலையும் தாய் மாமா…

தன் துக்கத்தை தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டு இறுகிப்போய் அமர்ந்திருக்கும் சிறுவனின் அம்மா…

ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அவரவர் நியாயத்தோடு நம் கண்முன் நடமாடுகின்றன.

இவர்களில் யார் செய்தது சரி? யார் செய்தது தவறு? என பார்வையாளர்களால் தீர்க்கமானதொரு முடிவுக்கு வரமுடியாமலே சம்பவங்களை பின் தொடர வைக்கிறார் இயக்குநர்.

புதுமுகம் ராதிகா பிரசித்தா… மெர்லினாக நடித்திருக்கிறார் என்று சொல்லவே வருத்தமாக இருக்கிறது. மெர்லினாகவே தன்னை ஒப்படைத்திருக்கிறார்.

தப்பித்துப்போக மனமில்லாமல் பாதி வழியே திரும்பி வந்து அடிபட்ட மாணவனின் அம்மாவின் காலடியில் விழுந்து கதறும் அந்த கணங்கள்… கண்கள் கலங்கவில்லை, உடைகின்றன.

மாணவனின் தாய் மாமனாக வரும் பாவெல் நவகீதன் தமிழ்சினிமாவுக்கு நல்வரவு!

தன் சகோதரியின் மகனை அடித்த டீச்சரை கோபாவேசத்துடன் தேடி அலையும் தோழர் உதயன், கடைசியில் அதே டீச்சருக்கு மக்சீம் கார்க்கியின் தாய் நாவலை பரிசளிப்பது காட்சிவழி கவிதை.

பாலியல் கல்வியின் அவசியம் என்கிற மிகவும் சிக்கலான ஒரு பிரச்சனையை கையில் எடுத்து, அதை விறுவிறுப்பான திரைக்கதை உத்தியுடன் வெகு மக்களையும் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் பிரம்மா.

ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் குழந்தைகள் உடன் அவசியம், பார்க்க வேண்டிய படம் அல்ல, பார்த்தே தீர வேண்டிய படம் – ‘குற்றம் கடிதல்’.
Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better