Search
Monday 10 December 2018
  • :
  • :

கவண் – விமர்சனம்

கவண் – விமர்சனம்

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்க வேண்டிய ஊடகங்கள், இன்றைக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் கையிலும், ஊழல் அரசியல்வாதிகளின் கையிலும் சிக்கி எப்படி எல்லாம் சோரம்போய்க்கொண்டிருக்கின்றன என்பதை செருப்பால் அடித்ததுபோல் சொல்கிற படம் – கவண்.

லட்சியக் கனவோடு டி.வி.சேனலில் வேலைக்குச் சேரும் திலக் (விஜய் சேதுபதி) பத்திரிகை தர்மத்தோடு செய்திகளை வழங்க நினைக்க, அவர் எடுக்கும் முயற்சிகளுக்கு, சேனல் முதலாளியே (ஆகாஷ்தீப் சேகல்) தடையாக இருக்கிறார்.

திலக் வழங்கிய உண்மை செய்தியை தன் சுயலாபத்துக்காக உண்மைக்கு மாறான செய்தியாக  திரித்து ஒளிபரப்புகிறார்.

ஊழல் அரசியல்வாதியான தீரன் மணியரசுவிடம் (போஸ் வெங்கட்) பணம் வாங்கிக் கொண்டு, அவனை நல்லவனாக இமேஜ் பில்ட்அப் செய்யும் இழிவான வேலையை செய்வதோடு, அவனது தொழிற்சாலை வெளியேற்றும் கழிவால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராகப் போராடும் இளைஞர்களையும் தீவிரவாதிகளாக சித்தரிக்கவும் சேனலைப் பயன்படுத்துகிறார்.
ஊடக தீவிரவாதத்துக்கு எதிராக பொங்கியெழும் திலக், அங்கிருந்து வெளியேறி, டி.ராஜேந்தர் நடத்தும்  போணியாகாத ஒரு தொலைக்காட்சியில் வேலைக்கு சேர்ந்து தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து, வட இந்திய முதலாளியின் ஊடக அதர்மத்துக்கு எதிராக நடத்தும் தர்மயுத்தம்தான் படத்தின் கதை.

செய்தி சேனல்களின் பித்தலாட்டங்களை மட்டுமல்ல, டிஆர்.பி. ரேட்டிங்குக்காக பொழுதுபோக்கு சேனல்களின் ரியாலிட்டி ஷோக்களில் நடக்கிற மோசடிகளையும்  புட்டு புட்டு வைத்திருக்கிறார்கள்.

இந்த கதையை படமாக எடுத்தால், சேனல்களின் கோபத்துக்கு ஆளாக நேரும் என்பதையும்  மீறி, ‘மற்றவர்களை விமர்சிக்கும் ஊடகங்களும் விமர்சனத்துக்கும் உட்பட்டதே’ என்ற ஜனநாயகப் பார்வையுடன், காட்சி ஊடகங்களின் கயவாளித்தனத்தை படம் நெடுக சாட்டையால் விளாசி இருக்கிறார் கே.வி.ஆனந்த்.

மக்கள் பிரச்சனைக்காக போராட்டக்களத்துக்கு வரும் பெண்களை, ஊடகங்களும், காவல்துறையும் சேர்ந்து எப்படியான மன, உடல் நெருக்கடிக்குள்ளாக்குகின்றன என்பதையும்,  சிறுபான்மையினருக்கு எப்படி எல்லாம் தீவிரவாதி முத்திரை குத்தப்படுகிறது என்பதையும்  நேர்மையோடு மட்டுமல்ல கவலையோடும்  காட்சி படுத்தி இருக்கிறது கவண்.

சந்தேகமில்லை.. விஜய்சேதுபதியின் கேரியரில் முக்கியமான படம். கிடைத்த இடங்களில் எல்லாம் ஸ்கோர் செய்திருக்கிறார்.

மடோனா செபாஸ்டியனுக்கு வழக்கமான கதாநாயகி வேடம் அல்ல, படம் முழுக்க விஜய்சேதுபதி உடன் பயணிக்கிற வலிமையான கதாபாத்திரம். சொந்தக்குரலில்தான் அநியாயத்துக்கு சோதிக்கிறார்.  மலையாள வாடை.

பேராசைமிக்க சேனல் முதலாளியாக  ஆகாஷ்தீப் சேகல். அதிகம் அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார். ஆனாலும், அவரது கெட்டப்பும், உடல்மொழியும் உறுத்தல். சில காட்சிகளில் திருநங்கைத்தனமும் எட்டிப்பார்க்கிறது.

பாதி காமெடியன்… பாதி கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக டி.ராஜேந்தர்.  கதையின் திருப்பத்துக்கு அவரது கதாபாத்திரம் கை கொடுத்தாலும், அவுட் டேட்டட் ஆன அடுக்குமொழிபேசி சாகடிப்பதைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை.

சின்னச் சின்ன வேடங்களில் தலைகாட்டிக் கொண்டிருந்த சின்னத்திரை நடிகர் போஸ் வெங்கட்டுக்கு லைஃப்டைம் கேரக்டர். பிரகாஷ்ராஜ் நடித்திருக்க வேண்டிய வேடத்தை நம்பி கொடுத்திருக்கிறார் இயக்குநர். நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறார் போஸ் வெங்கட்.

கே.வி.ஆனந்த் படங்களில் இசையும், ஒளிப்பதிவும் பெரிய அளவில் கை கொடுக்கும். கவணில் இரண்டுமே மெனக்கெடல் இல்லாமல் ஏனோதானோவென இருக்கின்றன.
‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் இசையும், பின்னணி இசையும் ஹாரிஸ் ஜெயராஜின் அருமையை புரிய வைக்கின்றன.

கவண் – விபச்சார ஊடகங்களுக்கு எதிரான துணிச்சலான படம்.
Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better