Search
Tuesday 19 December 2017
  • :
  • :

கனவு வாரியம் – விமர்சனம்

கனவு வாரியம் – விமர்சனம்

வருடக்கணக்கில் கோடம்பாக்கத்திலேயே குப்பைக்கொட்டிக் கொண்டிருப்பவர்கள் குப்பைப் படங்களையே கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சினிமாவுக்கு சம்மந்தமே இல்லாமல் அமெரிக்காவில் வேலை பார்த்துவந்த அருண் சிதம்பரம் என்ற இளைஞர் தமிழ்சினிமாவுக்கு பெருமை தேடித்தரும்வகையில் கனவு வாரியம் படத்தை இயக்கி இருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை எதிர்பார்ப்பதை விட்டுவிட்டு (அப்புறம் என்னத்துக்கு அரசாங்கம்?), நம்மிடம் உள்ளவற்றைக் கொண்டே நமக்கு தேவையானவற்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற செய்தியை தாங்கி வந்திருக்கும் படம்.

அப்துல்கலாம் சொன்ன கனவு காணுங்கள்தான் கனவு வாரியம் திரைப்படத்தில் காட்சிகளாக விரிந்திருக்கின்றன.

எதைப்பற்றியாவது கேள்விகள் கேட்டுக் கொண்டே இருக்கும் தேடல்மிக்க சிறுவனான அருண் சிதம்பரம் பள்ளி படிப்பில் நாட்டம் இல்லாமல் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு ரேடியோ மெக்கானிக்காகிறான்.

ரேடியோ மெக்கானிக்காக இருந்தாலும் அறிவியல் தொடர்பான விஷயங்களையே எந்நேரமும் சிந்தித்துக் கொண்டிருக்கும் அருண் சிதம்பரம், கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின் வெட்டுக்கு தீர்வு காண, காற்றாலை மூலம் மின்சாரம் தயாரித்து தன்னுடைய கிராமத்துக்கு ஒளியேற்ற முயற்சிக்கிறான்.

அவனுடைய முயற்சி வென்றதா இல்லையா என்பதுதான் கனவு வாரியம் படத்தின் கதை.

ஹீரோ எடுக்கும் முயற்சி கடைசியில் வெற்றியடையும் என்ற தமிழ்சினிமா ஃபார்முலாவின்படி திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும், கனவு வாரியம் படத்துக்காக அருண் சிதம்பரம் எடுத்துக் கொண்ட விஷயம் புதுசு மட்டுமல்ல, புரட்சியும் கூட.

கல்வி முறையில் செய்யப்பட வேண்டிய மாற்றம், தற்போதைய காலக்கட்டத்தில் விவசாயத்தின் நசிவு, எதிர்காலத்தில் விவசாயத்தின் முக்கியத்துவம் என சமூக அரசியல் பிரச்சனைகளைப் பற்றியும், இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை தரக்கூடிய பல்வேறு விஷயங்களையும் போகிறபோக்கில் போட்டுத்தாக்கி இருக்கிறார்.

பிரச்சாரதொனியின்றி வெகுமக்கள் ரசிக்கும்படி ஜனரஞ்சகமானமுறையில் சொல்லியிருப்பதுதான் விசேஷம்.

கதாநாயகன், இயக்குநர் என இரண்டு பொறுப்புகளையும் சிறப்பாகவே செய்திருக்கிறார் அருண் சிதம்பரம்.

பாசாங்குகள் இல்லாத இயல்பான காட்சிகளின் மூலம் சிறந்த இயக்குநராகவும், வேறு யாருடைய சாயலும் இல்லாமல், சுய அடையாளத்துடன் கூடிய யதார்த்தமான நடிப்பின் மூலம் தேர்ந்த நடிகராகவும் கவனிக்க வைக்கிறார்.

அருண் சிதம்பரத்தின் நண்பராக வரும் பிளாக் பாண்டி அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்.

ஷாம் பெஞ்சமினின் இசையும், செல்வகுமாரின் ஒளிப்பதிவும் கனவு வாரியத்துக்கு பலம் சேர்த்திருக்கின்றன.

பள்ளிப்படிப்பை முடிக்காத ஒரு கிராமத்து இளைஞன் கண்டுபிடிப்பாளனாகிறான் என்று தன்னம்பிக்கையை விதைக்கும் கனவு வாரியம் வரவேற்கப்பட வேண்டிய படம்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better