Search
Saturday 20 October 2018
  • :
  • :

காஸி – விமர்சனம்

காஸி – விமர்சனம்

டைட்டானிக் போன்ற படங்களைப் பார்க்கும்போது இந்திய சினிமாவில் இப்படிப்பட்ட படங்கள் எல்லாம் சாத்தியமா என்று ஆதங்கப்பட்டவரா நீங்கள்?

காஸி உங்களுக்கான படம்.

டைட்டானிக் – கடலில் மிதந்த கப்பலில் எடுக்கப்பட்ட படம்.

காஸி – ஆழ் கடலுக்குள் பயணிக்கும் நீர்மூழ்கி கப்பலில் எடுக்கப்பட்ட படம்.

1971-ல் நடந்த இந்தியா, பாகிஸ்தான் போரின்போது விசாகப்பட்டிணத்தை தாக்க வந்த பாகிஸ்தான் நீர்மூழ்கி கப்பலான ‘காஸி’யைப் பற்றிய ‘புளூ ஃபிஷ்’ என்ற புத்தகத்தை எழுதிய சங்கல்ப் என்ற இளைஞரே காஸி படத்தை இயக்கி இருக்கிறார்.

அறிமுக இயக்குநர் என்று சொல்லமுடியாத அளவுக்கு தேர்ந்த இயக்குநரைப்போல் பரபரப்பான திரைக்கதையுடன் நேர்த்தியான படமாக காஸியைக் கொடுத்திருக்கிறார்.

தனது முதல் படத்திலேயே, தான் ஒரு வித்தியாசமான, திறமையான இயக்குநர் என்பதை நிரூபித்து விட்டார்.

சினிமாவுக்கான ஃபார்முலாவாக இருக்கும் காதல், டூயட், காமெடி போன்ற எந்தவொரு கமர்ஷியல் விஷயங்களையும் புகுத்தாமல், கதையை மட்டுமே நம்பி இப்படத்தை இயக்கியிருக்கும் சங்கல்ப்பின் துணிச்சலுக்கு… ஹாட்ஸ் ஆப்.

பாகிஸ்தான் நீர்மூழ்கி கப்பலான ‘காஸி’யை நம் இந்திய நீர்மூழ்கி கப்பலான ‘சி-21’ படை வீரர்கள் எப்படி புத்திசாலித்தனமாக அழித்து பேராபத்திலிருந்து விசாகப்பட்டிணத்தை காப்பாற்றினார்கள் என்பதுதான் ‘காஸி’யின் கதை.

வெறும் கப்பல் பயணமாக இல்லாமல்  உணர்ச்சிமிக்க பல சம்பவங்களுடன் மனதை தொடும்வகையில் டைட்டானிக் படம் எடுக்கப்பட்டிருந்ததைப் போலவே காஸியையும் எடுத்திருக்கிறார்கள்.

கடலுக்கடியில் பயணிக்கும் கப்பல் என்றளவில் மட்டுமே நாம் அறிந்த நீர்மூழ்கி கப்பல் பயணத்தில் இத்தனை சாகசங்கள்…. சவால்களா? என வியக்க வைக்கின்றன.

350 மீட்டருக்கு கீழே சென்றநிலையில் ரேடியோ தொடர்பு துண்டிக்கப்படுவது, காஸியின் தாக்குதலிலிருந்து தப்பிக்க நடக்கும் உயிர்ப் போராட்டம் என கடலுக்கடியில் நடக்கும் பரபரப்பாக  விரிகின்ற காட்சிகள் நமக்கு புதிய அனுபவங்கள்!

ஏறக்குறைய காஸி  படத்தின் 90 சதவிகித காட்சிகளையும் கடலுக்கடியில் பயணிக்கும் நீர்மூழ்கி கப்பலிலேயே நடப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

செட்களிலும், க்ரீன்மேட், மினியேச்சர் போன்ற யுத்திகளிலும் எடுக்கப்பட்டிருந்தாலும், மதியின் ஒளிப்பதிவும், கிராபிக்ஸ் தொழில்நுட்பக் கலைஞர்களின் பணிகளும்  நிஜமான நீர்மூழ்கி கப்பலில் படமாக்கப்பட்டதுபோல் நம்ப வைத்திருக்கின்றன.

கமர்ஷியல் வேல்யூ இல்லை என்று ஒதுக்கிவிடாமல் இதுபோன்ற ஒரு கதையில் நடிக்க முன் வந்த கமர்ஷியல் ஹீரோவான ராணாவை  பாராட்ட வேண்டும்.

கப்பல் படை உயர் அதிகாரிகளாக வரும் ராணா, அதுல் குல்கர்னி, கே.கே.மேனனின் யதார்த்தமான நடிப்பு படத்துக்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது.

குறிப்பாக கே.கே.மேனனின் நடிப்பு யாரிவர் என கேட்க வைப்பதோடு அவரது தியாகத்தின்போது கலங்கவும் வைக்கிறது.

படத்தில் பெண்வாசனைக்காக சேர்க்கப்பட்டதுபோல் டாப்ஸி.

கடற்படை வீரர்களின் துணிச்சல், தேசப்பற்று என்பதை எல்லாம் தாண்டி இந்திய சினிமாவில்  இதுவரை பார்த்திராத கதைக்களத்துடனும், காட்சி அமைப்புகளுடன் படமாக்கப்பட்டுள்ள காஸி படம் பார்வையாளர்களை நிச்சயம் கவரும்.
Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better