Search
Friday 27 April 2018
  • :
  • :

திரைப்பட வியாபாரத்தில் புதிய புரட்சிக்கு வித்திட்ட விஜயா புரடக்ஷன்ஸ்.

திரைப்பட வியாபாரத்தில் புதிய புரட்சிக்கு வித்திட்ட விஜயா புரடக்ஷன்ஸ்.

கள்ளக்காதலும்… கருப்புப்பணமும்தான் சினிமா தொழிலின் தேசிய குணம்.

இந்தநிலையில் சமீபகாலமாக மாற்றம் தென்படத் தொடங்கி இருக்கிறது.

மாற்றம் ஏற்பட்டு வருவது கள்ளக்காதலில் அல்ல, கருப்புப் பணப்  புழக்கத்தில்.

கார்ப்பரேட்கள் சினிமாவுக்குள் வந்த பிறகு பண பரிவர்த்தனை குறைந்து காசோலை மூலமே அனைத்து பரிவர்த்தனைகளும் செய்யப்படுகின்றன.

இதனால் சினிமாவில் செய்யப்படும் அனைத்து செலவுகளும் அரசாங்கத்தின் பார்வைக்கு செல்லும் சூழல், அதாவது  கணக்கு காட்டப்படும் சூழல் ஏற்பட்டது.

கார்ப்பரேட் கம்பெனிகள் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியாமல் நடையைக்கட்டினாலும், அவர்கள் செய்த தொழில் சீர்திருத்தம் மட்டும் சினிமாவிலேயே தங்கிவிட்டது நல்ல விஷயம்.

அதில் ஒன்றுதான்…. காசோலைகள் மூலம் செலவுகள் மற்றும் சம்பளம் வழங்குவது.

இப்படி செய்வதன் மூலம் கருப்புப்பணத்துக்கு வேலையில்லாமல் போய்விடுகிறது.

தமிழ்சினிமாவில் நடிகர் அஜித்குமார் மட்டும் கடந்த சில வருடங்களாக தன்னுடைய மொத்த சம்பளத்தையும் காசோலை மூலம் வாங்கி வருகிறார்.

இப்படி செய்வதன் மூலம் அவரது  வருமானம் மொத்தமும் கணக்கில் காட்டப்பட்டு உரிய வரி செலுத்தப்படுகிறது.

தன்னுடைய வருமானத்துக்கு செலுத்த வேண்டிய வரியை தயாரிப்பாளர்களின் தலையில் கட்டுகிறார் என்று அஜித் மீது விமர்சனம் ஒரு பக்கம் இருந்தாலும், மற்ற ஹீரோக்களோ இன்னமும் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் 75 சதவிகிதத்தை கருப்பு பணமாகவே வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில் விஜய் நடிக்கும் பைரவா படத்தைத் தயாரித்து வரும் விஜயா புரடக்ஷன்ஸ் நிறுவனம் பைரவா படத்தின் தயாரிப்பு மற்றும் வியாபாரத்தை கள்ளக்கணக்கு காட்டாமல் வெள்ளையில்தான்  செய்து வருகிறது.

விஜய்யின் சம்பளம் தொடங்கி பலருக்கும் காசோலை மூலமே சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

பைரவா படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர் வட இந்தியாவை சேர்ந்த ஒரு முன்னணி நடிகை. ஒன்றரை கோடி சம்பளம் கேட்ட அவர் முக்கால்வாசி சம்பளத்தை ரொக்கப்பணமாக அதாவது கணக்கில் வராத கறுப்பில் கேட்டார். அதற்கு உடன்படாமல்தான் கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்தனர் விஜயா புரடக்ஷன்ஸ்.

தற்போது பைரவா படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய இறுதிகட்டத்துக்கு வந்துவிட்டநிலையில் படத்தின் வியாபாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

பைரவா படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்ரீ க்ரீன் புரடக்ஷன்ஸ் வாங்கியுள்ளது.

பெரும் தொகைக்கு விற்கப்பட்ட இந்த வியாபாரத்தில் மொத்தப்பணத்தையும் காசோலையாக வாங்கியுள்ளனர்.

இதன் மூலம் திரைப்பட வியாபாரத்தில் புதிய புரட்சிக்கு வித்திட்டுள்ளது விஜயா புரடக்ஷன்ஸ்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better