Search
Monday 23 April 2018
  • :
  • :

அம்மா கணக்கு – விமர்சனம்

அம்மா கணக்கு – விமர்சனம்

சமூகத்தைக் கெடுக்கும் படங்கள் பல்கிப்பெருகிவிட்டநிலையில், மிக அபூர்வமாகவே தமிழில் நல்ல சினிமா வெளியாகிறது.
அம்மா கணக்கு அப்படியொரு படம்.

அதற்காக கலைப்படம் அல்ல, வணிக சினிமாதான். ஆனால் கணவனை இழந்து, தன் மகளுக்காக வாழ்கிற ஒரு அம்மாவின் வாழ்வியலைச் சொல்லும் படம்.

தமிழில் இதற்கு முன் எத்தனை எத்தனையோ அம்மா சென்ட்டிமெண்ட் படங்கள் வெளிவந்திருக்கின்றன. அவற்றில் யதார்த்தத்தைவிட மிக உணர்ச்சியே மேலோங்கி இருந்திருக்கின்றன.

அம்மா கணக்கு யதார்த்தின் எல்லையை மீறாத படம்.

அம்மா கணக்கு என்ற தலைப்பைவிட அம்மா கனவு என்ற தலைப்பு வைத்திருக்கலாம்.

தன்னுடைய மகளைப் பற்றிய ஒரு தாயின் கனவுதான் படத்தின் கதை.

கதையின் நாயகி (அமலா பால்), மிகவும் ஏழ்மையானவள். கணவனை இழந்தவள்.

வீட்டுவேலை செய்வது, மீன் மார்க்கெட்டில் வேலை பார்ப்பது, ஆற்றில் துணி துவைப்பது என விக்ரமன் படத்தின் ஹீரோவைப்போல் ஒரே நாளில் நான்கைந்து வேலைகள் செய்து, தன் ஒரே மகளை படிக்க வைக்கிறாள்.

தன் மகள் படித்து, நல்ல வேலைக்குப் போய், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற அவளது கனவுக்கு  நேர்மாறாக இருக்கிறாள் மகள். 10ஆம் வகுப்பு படிக்கும் மகளுக்கோ படிப்பில் நாட்டம் இல்லை.

“டாக்டர் பிள்ளை டாக்டராகும். எஞ்சினியர் பிள்ளை எஞ்சினியராகும். நான் வேலைக்காரி பிள்ளை… வேலைக்காரியாகத்தானே ஆவேன்? அதுக்கு எதுக்கு நல்லா படிக்கணும்…?” என்று படிப்பில் கவனம் செலுத்தாமல் முரண்டு பிடிக்கிறாள்.

முக்கியமாக, கணக்குப் பாடத்தில் ஃபெயில் மார்க்.

படிப்பில் மகளின் நிலை அம்மாவை கவலையடைய வைக்கிறது.

மகளுக்கு எவ்வளவோ புத்தி சொல்கிறாள். மகளின் போக்கில் மாற்றம் இல்லை.

மகளை எழுச்சியடைய வைக்கும் வைராக்கியத்துடன் யாருமே செய்யாத ஒரு முடிவை எடுக்கிறாள்.

மகள் படிக்கும் அதே பள்ளியில் அதே வகுப்பில் மாணவியாக சேருகிறாள் அம்மா.

தன்னுடைய வகுப்பில் தன் அம்மா படிப்பதை  அவமானம் என்று நினைக்கும் மகளிடம், “கணக்குப் பாடத்தில் என்னைவிட நீ கூடுதலாக மார்க் வாங்கிக்காட்டு. நான் ஸ்கூலுக்கு வராமல் நின்றுவிடுகிறேன்” என்கிறாள்.

அம்மா – மகள் இருவரில் யார் கணக்கு பாடத்தில் அதிகமார்க் வாங்கினார்கள்?

அதன்பிறகு தாய்க்கும், மகளுக்கும் இடையில் நடக்கும் சம்பவங்கள் என்ன?

என்பதே ‘அம்மா கணக்கு’ படத்தின் மீதிக்கதை.

வேலைக்காரியாக அமலா பால், அவரது மகளாக யுவா, பள்ளித் தலைமை ஆசிரியராகவும், 10ஆம் வகுப்பு கணக்கு ஆசிரியராகவும் சமுத்திரக்கனி, அமலா பாலுக்கு வீட்டுவேலை செய்ய வாய்ப்பு கொடுக்கும் டாக்டராக ரேவதி… என கதாபாத்திரங்களும் நினைவில் நிற்கிறார்கள்.

வீட்டுவேலை செய்யும் அமலா பாலின் வீடு நம்பும்படியாக இல்லை. அமலா பாலின் மேக்கப்பும்தான்.

சமுத்திரக்கனியின் நடிப்பில் எப்போதும் இயல்பும் யதார்த்தமும் இருக்கும். இந்தப் படத்தில் வித்தியாசமாக நடிப்பதாக நினைத்துக் கொண்டு பிதாமகன் விக்ரம் பாடிலாங்வேஜை இரவல் வாங்கி இருக்கிறார்.

இப்படியாக சின்னச் சின்ன குறைகள் இருந்தாலும் அம்மா கணக்கு…. அசத்தலான கணக்கு.

பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுடன்…. குறிப்பாக ஏழைத்தாய்கள் தன் பிள்ளைகளுடன் பார்க்க வேண்டிய படம்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better