Search
Sunday 20 January 2019
  • :
  • :

கோவையில் நடந்தது…? என்ன அமீர் விளக்கம்…

கோவையில் நடந்தது…? என்ன அமீர் விளக்கம்…

கோவையில் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் அமீரை தாக்கும் முயற்சி நடைபெற்றது.

இது பற்றி அமீர் வெளியிட்ட அறிக்கை…

மாபெரும் ஜனநாயக நாடான இந்தியா, அஹிம்சையை, சகிப்புத்தன்மையை, சகோதரத்துவத்தை, அன்பை, அரவணைப்பை, வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்குத் தந்த பெருமையுடையது. இவற்றை மையப்படுத்தியே நம்முடைய அரசியல் சாசனத்தை சட்டமேதை அம்பேத்கர் தலைமையிலான தன்னலமற்ற மேதைகள் வகுத்தளித்துள்ளனர்.

தேசத்தின் புனித நூலான – ”அரசியல் சாசனம்” தந்துள்ள அடிப்படை உரிமைகள் நிலைநாட்டப்படவும், காக்கப்படவும் வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு. கருத்து சுதந்திரம், பேச்சுரிமை, எழுத்துரிமை எக்காலத்திலும், யாவர்க்கும் சமமாக இருக்க வேண்டும் என்பதற்காக, பல்வேறு இடையூறுகளை, குறுக்கீடுகளை, அதிகாரத்தின் கட்டுப்பாடுகளையும் தாண்டி சில அச்சு ஊடகங்களும், தொலைக்காட்சி ஊடகங்களும் முடிந்தளவுக்கு, மக்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றன.

அதன் நீட்சியாகத்தான், இன்றைய தினங்களில் நாடு முழுவதும் பல்வேறு தொலைக்காட்சிகளில் கலந்துரையாடல், விவாத நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதன் வாயிலாக, நேர்மையான கருத்துக்களை ஆட்சியாளர்களுக்கும், உண்மையை மக்களிடத்தும் எடுத்துச் செல்லும் வாய்ப்பு நடுநிலையாளர்களுக்கு கிடைத்திருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் தான் கடந்த 08ம் தேதி புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனம் கோவையில் வட்டமேசை விவாத நிகழ்ச்சியை நடத்தியது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல்வேறு தலைவர்களும் தங்களுடைய கருத்துக்களை முன் வைத்தனர். எல்லா கருத்துக்களையும் கேட்டு யார் தங்களின் குரலாகப் பேசுகிறார்களோ, அவர்களுக்கு பெரும் ஆதரவை அந்த அரங்கினுள் இருந்த மக்கள் அளித்து வந்தனர்.

அந்த வரிசையில் நானும் என் கருத்தை முன் வைக்த போது அங்கிருந்த சிலர், கருத்தை – கருத்தால் எதிர்கொள்ள முடியாமல், தக்க பதில் அளிக்கத் தெளிவில்லாமல், மத துவேஷத்துடன், ஜனநாயகத்திற்கு எதிரான வகையிலும், பொது சபையின் கண்ணியத்தைக் காக்காமலும், என்னைப் பேசவிடாமல் தடுத்ததோடு மட்டுமல்லாமல், சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, சட்டம்-ஒழுங்கை குலைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டனர்.

சமீப காலமாக, தேசத்தை ஆளுகின்ற தேசியக் கட்சி, அவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுகின்றவர்களுக்கு புதிய பட்டங்கள் சூட்டுவதும், உண்மைக்குப் புறம்பான தகவல்களைச் சொல்வதும், சில நேரங்களில் நடக்காததைக் கூட நடந்ததாக கூறுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். மேலும், தாங்கள் செய்தவற்றையெல்லாம் மறைப்பதோடு எதிரே நிற்பவர்களின் மேல் வீண் பழியை சுமத்துவதிலுமே குறியாக இருக்கின்றனர்.

அந்த வகையில் தான் அன்றைய தினமும், நானும் மற்ற தலைவர்களும் தேசியக் கட்சியின் பிரதிநிதி பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டோம். அதற்குப் பதில் சொல்லும் விதமாக, நடந்த உண்மையை, சில சம்பவங்களை நான் முன் வைத்த போது, “பேசக்கூடாது.. மீறினால் கடும் விளைவுகளைச் சந்திப்பாய்..!” என்று சர்வாதிகாரமாக உத்தரவிட்டதோடு மட்டுமல்லாமல், என்னைத் தாக்குவதற்கும் முற்பட்டனர்.

இந்திய தேசத்தில் மைய அரசாக அவர்கள் இருக்கிறார்கள், என்பதற்காக எதை வேண்டுமானலும் சொல்ல முடியும்.! செய்ய முடியும்.! என்றால் அதற்குப் பெயர் சர்வாதிகார மமதை அல்லது ஜனநாயகப் படுகொலை என்பதைத் தவிர வேறில்லை. இதைத்தான், பொதுத்தளங்களில் பயணிக்கும் நான் உள்பட பல்வேறு தரப்பினர் தங்களது கருத்தாக தொடர்ச்சியாகப் பதிவு செய்து வருகின்றனர். அது இப்போது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது.

அதிகாரம் – அவர்கள் கையில் இருக்கின்ற காரணத்தினால், தவறு செய்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் ஜனநாயகத்தை காக்க முயலுகின்ற ஊடகத்தின் மீதும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுமைகளின் மீதும் வழக்கு தொடுத்திருப்பது தமிழக மக்களின் நெஞ்சங்களில் கேள்வியாக எழுந்துள்ளது.

நியாயப்படி, என் மீதும் புதிய தலைமுறை செய்தியாளர் மீதும், அத்தொலைக்காட்சி மீதும் போடப்பட்டிருக்கிற வழக்குகளில் எள்ளளவும் உண்மைத் தன்மையில்லாத காரணத்தால் அவ்வழக்கை வாபஸ் பெறுவதோடு மட்டுமல்லாமல், தவறிழைத்தவர்கள் மீது தக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும். “சத்தியமே வெல்லும்” என்ற வார்த்தையை தன்னுடைய இலச்சினையில் பொறித்திருக்கிற தமிழக அரசு கூடிய விரைவில் அதைச் செய்யும் என்று நம்புகிறேன்.

அப்படி நடக்காத பட்சத்தில், சட்டப்படி நீதிமன்றத்தை நாடி வழக்கை சந்தித்து அங்கு நடந்த உண்மைகளை “வீடியோ காட்சிகள்” மூலமும், சாட்சியங்களின் வாயிலாகவும் நிலைநாட்டி வெற்றி பெறுவதோடு, மக்கள் உண்மைகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பாகவும் இவ்வழக்கை அமைத்துக் கொள்வேன்.

நடைபெற்ற விவாத நிகழ்ச்சியின் போது, எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும், எனக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருந்து வருகின்ற திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் திருநாவுக்கரசர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் விஜயகாந்த், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் மணியரசு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலாளர் எம்.தவ்ஃபீக், மனிதநேய ஜனநாயக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ., கட்சியின் மாநிலத் தலைவர் தெஹ்லான் பாஹவி, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைப் பொதுச் செயலாளர் முகம்மது ஷிப்லி ஆகியோருக்கும் அவர்களது கட்சியினருக்கும் மற்றும் ஆம் ஆத்மி கட்சி, மக்கள் பாதை, தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை, தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம், தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட், தீக்கதிர் நாளேடு, திரைப்பட இயக்குனர்கள் – கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் எண்ணிலடங்கா பத்திரிகை மற்றும் காட்சி ஊடக சகோதரர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better