Search
Wednesday 20 June 2018
  • :
  • :

‘உண்ணாவிரத நாடகத்துக்கு’ வர அஜித் போட்ட கண்டிஷன்…..

‘உண்ணாவிரத நாடகத்துக்கு’ வர அஜித் போட்ட கண்டிஷன்…..

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் படு தீவிரமாக நடந்து வரும்  மாணவர்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தை  தமிழகம் மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல, உலகமே திரும்பிப்பார்த்துக் கொண்டிருக்கிறது.

தமிழக இளைஞர்களின் அறவழிப்போராட்டத்தை அத்தனை தொலைக்காட்சிகளும் 24 மணி நேர நேரலை செய்து மாணவர்களின் மன உறுதியை மக்கள் மன்றத்துக்குக் கொண்டு சேர்த்து வருகின்றன.

இந்த சூழலில்தான், மாணவர்களின் போராட்டத்தை திசைதிருப்பும்வகையில் ஒட்டுமொத்த நடிகர் நடிகைகளையும் திரட்டி உண்ணாவிரதம் நடத்துகிறது நடிகர் சங்கம்.

மாணவர்களின் எழுச்சிப்போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய வைக்கும் தந்திரமே  நடிகர் சங்கம் நடத்துகிற உண்ணாவிரத நாடகம்.

ரஜினி, கமல், விஜய், அஜித் கலந்து கொள்கிறார் என்றால் அத்தனை ஊடகங்களும் மாணவர்களின் போராட்டத்தை மறந்து, பவுடர் முகங்களை படம் பிடிக்க வந்துவிடுவார்கள்.  அத்தனை தொலைக்காட்சியும் நேரலை செய்யும்.

இப்படி ஒரு விஷயம் நடக்கக்கூடாது என்பதற்காகவே நடிகர் சங்கத்தினர் உண்ணாவிரதம் நடத்தக் கூடாது என்று ஜல்லிக்கட்டுக்காக போராடுகிறவர்கள்  எச்சரித்தனர்.

நடிகர் கமல்ஹாசன் கூட இது குறித்து அறிவுரை வழங்கினார்.

அதையும் மீறி  உண்ணாவிரத நாடகத்தை நடத்தியே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர் நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள்.

அதே நேரம், உண்ணாவிரதத்தை தொலைக்காட்சி ஊடகங்களும், இணைதளங்களும் படம்பிடிக்க வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

நடிகர் சங்கம் சார்பில் அதன் தலைவரான நாசர் விடுத்த வேண்டுகோள் இதுதான்..

‘‘இன்று தமிழக எல்லைக்குள் மட்டுமல்ல உலகம் முழுவதும் பரவிகிடக்கும் மக்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பில் மூழ்கி இருக்கிறார்கள்.

முதுபெரும் தமிழ்க்குடியின் ஒரு கலாச்சார சின்னம் முடக்கப்பட்டுக்கிடக்கிறது.

அதை மீட்டு கொண்டு வர தன்னிச்சையாய் தன்னார்வத்தோடு அலைகடலென மாணவர் சமுதாயமும் இளைஞர்களும் ஒன்று சேர்ந்து போராடுகின்றனர்.

அவ்வெழுச்சியினால் ஈர்க்கப்பட்டு பெண்களும் , குழந்தைகளுமாய் வீதி இறங்கி பங்குபெறுகின்றனர்.

இம்மாபெரும் போராட்டத்திற்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் முழுமையான ஆதரவை தருகிறது.

வெறும் பேச்சுக்களால் அல்லாமல் மௌனத்தை மொழியாய் கொண்டு “மௌன அறவழி அமர்வை” நடத்துகிறது.

நடிகர் சமூகம் மட்டுமின்றி பல்வேறு துறை சார்ந்தோரும் கலந்து கொண்டு ஆதரவை வெளிபடுத்த போகின்றனர்.

யாரும் கருத்துகளை , ஆலோசனைகளை வெளிபடுத்தப் போவதில்லை.

எனவே, எங்களது இந்த நிகழ்வை டி.வி மற்றும் இணையதள நண்பர்கள் வீடியோ கவரேஜ் செய்ய வேண்டாம்”

என்று நாசர் கேட்டுக்கொண்டார். அவரது இந்த அறிவிப்பு ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களுக்கு சற்றே நிம்மதியைக் கொடுத்தது.

தமிழ் உணர்வுமிக்க செய்தியாளர்கள் மத்தியிலும் நாசரின் அறிக்கைக்கு  நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், நடிகர் சங்க உண்ணாவிரதத்துக்கு காட்சி ஊடகங்களை வர வேண்டாம் என்று சொன்னதற்கான உண்மையான காரணம் தற்போது தெரிய வந்திருக்கிறது.

உண்ணாவிரதத்துக்கு அஜித்தை அழைத்தபோது, நிறைய மீடியாக்கள் வரும்… அனாவசியமாக கேள்விகள் கேட்பார்கள் என்று தயங்கினாராம் அஜித்.

அவரை எப்படியாவது உண்ணாவிரதத்துக்கு வர வைக்க வேண்டும் என்பதற்காகவே ஊடகங்களுக்கு தடை போட்டதாக தகவல் உலவுகிறது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better